அட்ராசடி அக்கிரமம்!

அவினாசி அருகே செம்பியன் குளத்தை விழுங்கிய ‘பைப்லைன்’!

பொதுக் குளத்தில் தனியார் பைப்! ஊராட்சிக்குத் தெரியாமல் 15 ஆண்டுகளாக நடந்த ‘ரூ. பல கோடி’ தண்ணீர் கொள்ளை! 

திருப்பூர் மாவட்டம், அவினாசி ஒன்றியம், சேவூர் பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது வரலாற்றுச் சிறப்புமிக்க செம்பியன் குளம். மழைக்காலங்களில் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கும், நிலத்தடி நீர் மட்டத்திற்கும் உயிர் கொடுக்கும் இந்தக் குளத்தில், கடந்த 15 ஆண்டுகளாக வெளி உலகிற்குத் தெரியாமல் ஒரு பிரம்மாண்ட ‘தண்ணீர் கொள்ளை நாடகம்’ அரங்கேறி வந்துள்ளது.

அச்சமின்றி, சட்டத்தைப் பற்றிப் சிறிதும் கவலையின்றி, பொதுச் சொத்தான குளத்தின் வயிற்றுக்குள்ளேயே பைப்லைனைப் பதித்து, சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்குத் தண்ணீரைச் சுருட்டி வரும் இந்தச் சட்டவிரோதச் சம்பவம் தற்போது அம்பலமாகி ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிரவைத்துள்ளது.

குளத்தின் நடுவே கருப்புப் பைப்! – என்ன நடக்கிறது சேவூரில்?

சேவூர் பேருந்து நிறுத்தம் மற்றும் கறிக்கடைப் பகுதிக்கு பின்புறம் அமைந்துள்ள செம்பியன் குளத்தைப் பார்வையிடும் எவருக்கும் ஒரு காட்சி பேரதிர்ச்சியைத் தரும். குளத்தின் நடுவே, தண்ணீருக்குள்ளும் சகதிக்குள்ளும் புதைந்தபடி நீண்டுகொண்டே போகிறது ஒரு தடிமனான கருப்பு நிற பைப்லைன்!

"இது குடிநீர் பைப்பா அல்லது பொதுப்பணித் துறையின் திட்டமா?" என்று விசாரித்தால், அங்குதான் காத்திருக்கிறது மிகப்பெரிய அதிர்ச்சி திருப்பம். இது அரசாங்கத்தின் பைப்போ அல்லது மக்களுக்குக் குடிநீர் கொண்டு செல்லும் திட்டமோ அல்ல; தனிநபர் ஒருவர் தனது சொந்த லாபத்திற்காகப் போட்ட 'தனியார் பைப்லைன்'!

2017 வறட்சியைப் பயன்படுத்திய 'மாஸ்டர் பிளான்'!

கடந்த 2017–18 ஆம் ஆண்டுகளில் தமிழகமே கடுமையான வறட்சியில் பிடியில் சிக்கித் தவித்தது. அப்போது நிலவிய கடுமையான தண்ணீர் பிரச்சனையைப் பயன்படுத்திக் கொண்ட திரையரங்கு மற்றும் திருமண மஹால் உரிமையாளர் பழனிசாமி என்பவர், தனது ஒரு தோட்டத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல போட்ட திட்டம் தான் இந்தச் சட்டவிரோத பைப்லைன்.

நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான சாலையின் பாலத்திற்கு அடியிலும், ஊராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள செம்பியன் குளத்தின் மையப் பகுதியிலும் தாராளமாக பைப்பைப் பதித்துள்ளார்.

ஊராட்சிக்கு ‘ஆப்பு’! – அனுமதியும் இல்லை, அதிகாரிகளுக்கும் தெரியாது!

பொதுவாக, ஒரு சிறு வீட்டின் குடிநீர் இணைப்பிற்குக்கூட ஊராட்சி மன்றத்தின் அனுமதி பெற வேண்டும். ஆனால், ஒரு கிலோமீட்டர் தொலைவிற்குப் பொதுக் குளத்தின் வழியே பைப்லைன் கொண்டு செல்லப்பட்டதற்கு ஊராட்சி மன்றத்திலோ, நெடுஞ்சாலைத் துறையிலோ அல்லது அரசிடமோ எந்தவிதமான முறையான அனுமதியும் பெறப்படவில்லை என்பதுதான் உறைக்க வைக்கும் உண்மை!

"பஞ்சாயத்தில் எந்த அனுமதியும் வாங்கவில்லை; அதிகாரிகளுக்கும் தெரியாமல் தன்னிச்சையாகவே வெட்டிப் பைப்பைப் போட்டுவிட்டார்கள்" என்று உள்ளூர் வட்டாரங்கள் கொந்தளிக்கின்றன. 10 முதல் 15 ஆண்டுகளாக இந்தச் சட்டமீறல் அரசு அதிகாரிகளின் மூக்கிற்கு கீழேயே தடங்கலின்றி நடந்து வந்துள்ளது.

விவசாய மின்சாரம்... வணிகப் பயன்பாடு! – பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு!

இந்த விவகாரத்தில் மிகவும் ஆபத்தான விஷயம் என்னவென்றால், விவசாய பயன்பாட்டிற்காக அரசு வழங்கும் மானிய/இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தி, கிணறு மற்றும் போர்வெல்லில் இருந்து தண்ணீரை உறிஞ்சி, அதைத் தனது வணிகப் பயன்பாட்டிற்காக (Commercial Purpose) கடத்திச் சென்று பயன்படுத்தியிருப்பது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 * மின்சார வாரியத்திற்கு ஏமாற்றம்: இலவச மின்சாரத்தை வணிக நோக்கத்திற்குப் பயன்படுத்தியது மின்சார சட்டப்படி கடும் குற்றமாகும்.

 * கஜானாவிற்கு இழப்பு: முறையான அனுமதி, வரிகள், வணிகக் கட்டணங்கள் எதுவும் செலுத்தாமல் கடந்த 15 ஆண்டுகளாகத் தண்ணீரைச் சுருட்டியதன் மூலம், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

போலீசாரும் அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுக் குளத்தையும், நெடுஞ்சாலைப் பாலத்தையும் ஆக்கிரமித்துத் தனியார் லாபத்திற்காகத் தண்ணீரைத் திருடும் இந்தச் செயல், அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டத்தை மதிக்காமல், அரசு கஜானாவிற்குப் பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய நபர் மீது போலீசாரும், வருவாய்த் துறையினரும், மின்சார வாரியமும் இணைந்து உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சேவூர் பொதுமக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது!

நீர்வளத்தைப் பாதுகாப்பதாகக் கூறும் தமிழக அரசு, செம்பியன் குளத்தில் பாய்ந்து கொண்டிருக்கும் இந்தச் சட்டவிரோத ‘பைப்லைன் மாயாஜாலத்திற்கு’ முற்றுப்புள்ளி வைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

கருத்துரையிடுக

0 கருத்துகள்